Saturday, October 24, 2009

இஸ்லாமிய சட்ட உதவி கோரும் ஆஸ்திரேலிய பெண்மணி!


தன்னைச் சட்ட விரோதமாக விலக்கி வைத்து மற்றொரு பெண்ணுடன் வசிக்கும் தன் கணவனை இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி விசாரணை செய்ய வேண்டும் என ஸ்டிஃப்னி என்ற ஆஸ்திரேலிய பெண்மணி துபை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


வியன்னாவிலிருந்து விடுமுறை முடிந்து துபை திரும்பிய வேளையில், தன் கணவருடன் வசித்திருந்த வீட்டின் பூட்டு மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியான ஸ்டிஃப்னி, பின்னரே தன் கணவன் மற்றொரு பெண்ணுடன் தன் வீட்டில் வசிப்பதைத் தெரிந்து கொண்டுள்ளார். அது மட்டுமன்றி இவரின் வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டையும் அவர் கணவர் முடக்கியிருக்கின்றார். தற்போது நண்பர்களின் உதவியுடன் மற்றொரு அறை வாடகைக்கு எடுத்து வசிக்கு இவர், துபை நீதிமன்றத்தில் தன் கணவனிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி தன்னுடைய வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் அவர் தன் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். வெளிநாட்டு பிரஜைகள், தங்கள் வழக்குகளை இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது ஐக்கிய அரபு குடியரசில் அதிகரித்து வருகிறது.


60 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிமல்லாதாரின் குடும்ப வழக்குகள் ஐக்கிய அரபு குடியரசின் சட்டத்தைப் பின்பற்றி நடந்து வருவதாகவும் வழக்கு பதிபவர்களில் அநேகரும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படி தங்கள் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு கூறினால் போதும் என்று கோரிக்கை வைப்பதாகவும் தனியார் வழக்குகளின் டைரக்டர் முஹம்மது அப்துல் ரஹ்மான் இப்ராகீம் கூறினார். இவ்வருடம் இதுவரை 122 விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


விவாகரத்து வழக்கு பதிவு செய்பவர்கள் அவரவரின் நாட்டிலுள்ள சட்டம் அல்லது துபையிலுள்ள சட்டம், இவற்றில் எந்தச் சட்டத்தின் மூலம் வேண்டுமானாலும் வழக்கை நடத்தலாம். அதனைத் தேர்வு செய்வதற்கான முழு உரிமை வழக்குப் பதிவு செய்பவருக்கு உள்ளது. ஆனால், பலக் காரணங்களால் வழக்கு பதிவு செய்பவர்களில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் தங்கள் வழக்கை இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படியே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக இப்ராகீம் மேலும் கூறினார்.

முஸ்லிமல்லாதவர்களால் துபை நீதிமன்றங்களில் பதிவாகும் வழக்குகளில் பெரும்பாலானவையும் இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்படியே நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடுப்பவர்களாலேயே கோரிக்கை வைக்கப்படுவது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.