Monday, July 12, 2010

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி விருதுகள்

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி விருதுகள்
ஜெர்மனியின் இளம் வீரர் தாமஸ் முல்லருக்கு நேற்று இரண்டு விருதுகள் கிடைத்தன. சிறந்த இளம் வீரருக்கான விருது மற்றும் கோல்டன் பூட் விருது ஆகியவற்றை அவர் தட்டிச் சென்றார்.

உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சர்வதேச கால்பந்து சம்மேளனம் வழங்கும் இந்த விருதுகளுக்குக் கடும் போட்டி நிலவி வந்தது. ஜெர்மனியின் குளோஸ், ஸ்பெயினின் வில்லா உள்ளிட்ட சிலர் இந்த விருதுகளைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

சிறந்த வீரர் டியகோ போர்லான்

சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை உருகுவே வீரர் டியகோ போர்லான் தட்டி்ச் சென்றார். உருகுவேயின் சிறப்பான ஆட்டத்திற்கு போர்லானின் பங்கு மிகப் பெரியது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார்.

2வது இடம் நெதர்லாந்தின் ஸ்னீடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வில்லாவுக்கும் கிடைத்தது.

அதிக கோல்கள் அடித்தவர் தாமஸ் முல்லர்

அதிக கோல்கள் அடித்த வீரராக ஜெர்மனியின் தாமஸ் முல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொடரில் அவர் ஐந்து கோல்கள் அடித்திருந்தார். இதுதவிர 3 கோல்கள் கிடைக்கவும் இவர் காரணமாக இருந்தார்.

இதன் காரணமாக டேவிட் வில்லா, ஸ்னீடரை முந்திக் கொண்டு விருதை தட்டிச் சென்றார். இந்த இருவரும் கூட தலா ஐந்து கோல்களைப் போட்டிருந்தனர். இருப்பினும் தத்தமது அணிகளுக்கு தலா ஒரு கோல் கிடைக்க மட்டுமே இவர்கள் உதவியாக இருந்ததால், முல்லருக்கு விருது கிடைத்தது.

சிறந்த கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ்

சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருதை தட்டிச்சென்றார் ஸ்பெயின் கோல்கீப்பர் இகர் கேசில்லாஸ். இந்தத் தொடரில் ஸ்பெயின் அணி 2 கோல்களை மட்டுமே வாங்கியது. இந்த சிறப்புக்கு இகர் கேசில்லாஸின் சிறப்பான செயல்பாடே காரணம்.

சுவிட்சர்லாந்திடம் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது ஸ்பெயின். இதனால் கேசில்லாஸ் விமர்சனத்துக்குள்ளானார். ஆனால் அடுத்து வந்த அத்தனை போட்டிகளிலும் ஸ்பெயின் பிரமாதமாக ஜெயித்தது. ஒரு கோல் கூட ஸ்பெயினுக்கு எதிராக விழாமல் அட்டகாசமாக கீப்பிங்கை செய்தார் இகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த இளம் வீரர் தாமஸ் முல்லர்

சிறந்த இளம் வீரருக்கான விருதும் ஜெர்மனியின் முல்லருக்கே கிடைத்தது. ஜெர்மனி அணி 3வது இடம் வரை வந்ததற்கு முல்லரின் ஆட்டமே முக்கிய காரணம். இந்தத் தொடர் முழுவதும் முல்லர் படு விறுவிறுப்பான ஆட்டத்தைக் காட்டி அசத்தியிருந்தார்.

நேர்மையான ஆட்டம் தந்த அணி ஸ்பெயின்

சிறந்த ஃபேர்பிளே விருது ஸ்பெயின் அணிககே கிடைத்தது.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் இனியஸ்டா

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்பெயினின் ஆன்டிரஸ் இனியஸ்டா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் போட்ட கோல்தான் ஸ்பெயினுக்கு கோப்பையை வாங்கித் தந்தது என்பதால் இந்தப் பரிசு.

Courtesy : That's Tamil . com