குவியல் குவியலாய் பெண் சடலங்கள்......
பூகம்பத்துக்கும் அசராத கட்டிடங்கள்.....
தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள்,பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிமறிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம் ஆண்டுஅமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம், மர்ம போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த புதர்களுக்குஇடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில் கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன. உடனே அதை மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம் ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார்.
பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450&ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் 3புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்திபச்சாகுட்டியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.
சுமார் நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா சாம்ராஜ்யம் 1572&ல் சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் ஸ்பானிஷ் படையெடுப்பால் இன்கா இனம் அழிந்து போனது. ஆனால் ஸ்பானிஷ் வீரர்களால் மச்சுபிச்சுவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அது சேதப்படாமல் தப்பியது.
நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி பெரு. எனவே அங்கு வசித்தஇன்கா மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாத கட்டிடங்களை கட்டுவதில் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர். பெரிய வழவழப்பான சதுர கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள் கட்டப்பட்டன. இவை நிலநடுக்கத்தின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல் அசைந்து கொடுத்து,பின்னர் பழைய நிலைக்கே திரும்பி விடுமாம். இரு கற்களுக்கு இடையே ஒரு பிளேடுகூட நுழைய முடியாத படி கனகச்சிதமாக சுவர்களை அமைத்துள்ளனர். கதவு, ஜன்னல்கள் வளைவான முனைகளுடன் முக்கோண வடிவில் கீழிருந்து மேல் சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நில அதிர்வுகளை தாங்கி இன்றும் இந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.
மச்சுபிச்சுமலை மையப்பகுதியில் இன்டிகுவாட்னா, சூரிய கோயில் மற்றும் 3 ஜன்னல்கள் அறை என 3 முக்கிய கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்டிகுவாட்னா இன்கா மக்களின் சூரிய கடிகாரம் மற்றும் நாள்காட்டி எனக்கருதப்படுகிறது. சூரியனை நோக்கி நடப்பட்டிருக்கும் இந்த கல் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரம் மற்றும் நாட்களை அவர்கள் கணக்கிட்டனர். மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி, விவசாய பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே பெரிய மதில் சுவர். விவசாய தளங்களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள மலைகளிலும் கட்டுமானங்கள், விவசாய தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை வசதியும்செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.
இந்நிலையில் பராமரிப்பின்றி விடப்பட்ட மச்சுபிச்சு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது. அதற்கு பின்னர் பலநூற்றாண்டுகள் அது வெளியுலகுக்கு தெரியாமலே இருந்தது.1911&ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிங்காம் தான் கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார். அப்போதிருந்துமச்சு பிச்சு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த தலமாகிவிட்டது. மச்சுபிச்சுவைபாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக 1981&ல் பெரு அரசு அறிவித்தது. 1983&ல் யுனெஸ்கோ அமைப்பு அதை உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது. 2007&ல் யுனெஸ்கோ நடத்திய வாக்கெடுப்பில் மச்சுபிச்சு மலை 7 உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்வானது. பெருநாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகியுள்ளது.
மச்சு பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள், வெள்ளி சிலைகள், நகைகள், மனித எலும்புகள் உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை யேல்பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல் பல்கலைக்கழத்திலேயே உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து வருகிறது. அவற்றை பாதுகாக்க பெருவில் போதிய வசதியில்லை என சாக்கு கூறி யேல் பல்கலை தட்டிக்கழித்து வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில் கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது. மேலும், மச்சுபிச்சு பகுதியில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன.
இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையது. பெண்கள் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. கொத்துக் கொத்தாக பெண்களை கொலை செய்ய என்ன அவசியம் வந்தது?
மச்சுபிச்சு மர்மம் இன்றளவும் தொடர்கிறது...........!!
=========================================
For more information about MACHU-PICCHU in PERU,
read fully @ WIKIPEDIA
http://en.wikipedia.org/wiki/Machu_Picchu
No comments:
Post a Comment
COMMENTS PLEASE....!