Wednesday, January 05, 2011

Eye on your EYES :-)




நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.


1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண்டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு நம் கண்களுக்கு பலவகையில் சோதனைகளைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப்படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடிவமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.


பொதுவாக ஒரு நிமிடத்தில் நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.

ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

3. இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண்களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

4. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

5. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப்பட்ட துணியை, அலுவலகத்திற்குச் செல்கையில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்தவுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்கவும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

6. வைட்டமின்கள்: ஊட்டச் சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.

கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்


Thanks to : TAFAREG Group.



  • FACE is the Index of your MIND.   :-)
  • EYES are the Index of your FACE :-))
  • So, Mind your Eyes for better Health. :-)))

No comments:

Post a Comment

COMMENTS PLEASE....!