Thursday, September 10, 2009

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1,5)
.
1) "அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
.
2) "ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
.
3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான். அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும்" என்றார்கள். "ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
.
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
-
அல்லாஹூம்ம இன்னக்க அஃப்வுன்
துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
..
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)
.
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ‘83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.
.
ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!
.
ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும்.
.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக.....!
.
ஆமின்... யா ரப்பில் ஆலமின்.