Thursday, January 21, 2010

க்ரீன் டெக்னாலஜி - GREEN TECHNOLOGY


க்ரீன் டெக்னாலஜி’ (GREEN TECHNOLOGY) என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.
.
இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளையே பெரிதுமாக பொருளாதாரத்துக்கு உலகம் நம்பிக் கொண்டிருந்தது. உலகமே இவற்றில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.
.
புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக இவற்றுக்கு மாற்று தொழில்நுட்பத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இன்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் வளங்களை எந்தவிதத்திலும் சேதாரப்படுத்தாமல், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் நகர்வது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும்.
.
எனவேதான் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகளாலும், பல நிறுவனங்களாலும் இத்துறை வளர்ச்சிக்காக செலவழிக்கப்படப் போகும் தொகை நாம் கனவில் கூட காணமுடியாததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளுக்கு கைகொடுக்கும் எனவும் தெரிகிறது.
.
எதிர்காலத்தில் வளர்ச்சி அடையப்போகும் துறை எப்படி இருக்கும் என்று துல்லியமாக விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். காப்பி குடித்துவிட்டு நாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்பிலிருந்து, விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் எரிபொருள் வரை எல்லாவற்றையுமே மாற்றப்போகிறோம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயற்கைக்கு இணக்கமில்லாத எல்லா விஷயங்களையும் தூக்கி கடாசிவிட்டு, புதிய விஷயங்களை உருவாக்கப் போகிறோம். புதியதோர் உலகம் படைக்கப் போகிறோம். நீங்கள் எழுதும் பேனாவிலிருந்து, வீடு, ரோடு என்று ஒன்றுவிடாமல் எல்லாமே மாறப்போகிறது.
.
இப்போது இருக்கும் விஷயங்களே, நம் பயன்பாடுகளுக்கு இலகுவாகதானே இருக்கிறது, நாம் ஏன் மாற்ற வேண்டும்? என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழலாம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? உலகு உயிர்ப்போடு இருந்தால் தான் மனிதக்குலமும் வாழும். இதுவரையிலான நமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் புல், பூண்டு கூட மிச்சமிருக்காது. இயற்கையின் கோபத்தை யார் தான் தாங்கிவிட முடியும்?
.
எல்லாவற்றையும் மாற்றுவதற்கான பணி இவ்வருடம் தொடங்குகிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்பணி பல நூற்றாண்டுகளாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் தான், கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் நாம் பாழ்படுத்திய உலகை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

நலிந்து கொண்டிருக்கும் விவசாயத்திற்க்கு மீண்டும் ஒரு விடிவு காலம் பிறந்தால் சரி தான்.
.
ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!
.
அடுத்து, இவ்வுலகத்தை ஆட்டி வைக்க காத்திருக்கும் (NANO TECHNOLOGY)நானோ தொழில்நுட்பத்தை பற்றி அறிவோம்...!!
.
அதுவரை விளம்பர இடைவேளை. :-)